சேலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன் பிவி. இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த 25ஆம் தேதி அன்று மாலை சேலம் செல்வதற்காக தனது அம்மா வீட்டின் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது அவரது கையிலிருந்த மூன்று பைகளில் ஒரு பையை ஆட்டோவில் மறந்துவைத்து விட்டு சென்றுள்ளார். அந்த பையில் 1 சவரன் தங்க கம்மல், கொலுசு, புத்தாடைகள் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மொய்தீன் பிவி பயணம் செய்த ஆட்டோவின் ஓட்டுநரான சண்முகம், மொய்தீன் தவறவிட்ட நகைகள்,புத்தாடைகள் இருந்த பையை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தனது ஆட்டோவில் கிடந்ததாக ஒப்படைத்தார். பயணி தவறவிட்ட நகைகள், புத்தாடையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி பாராட்டி அவருக்கு ஊக்க பரிசு வழங்கி கௌரவித்தார்.