விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் விவசாயிகளுடன் போராட்ட களத்தில் இறங்கி விவசாய சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் டெல்லி -ஹரியானா மாநில எல்லையில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிக்களான திருமாவளவனும், ரவிக்குமாரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இருவரும் விவசாயிகள் கோரிக்கையை கேட்டு தெரிந்து கொண்டு அவர்களுடன் தேநீர் அருந்தினர். பின்னர் விவசாய சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.