சிரியாவில் அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலின் போது தனது 4 வயதுள்ள குழந்தை அச்சப்படக்கூடாது என்பதற்காக, அவளின் கவனத்தை திசை திருப்புவதற்கு தந்தை செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியா நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். குர்திஷ் போராளிகளின் வசமிருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை சிரிய அரசு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர்.
மேலும், வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷ்யா உதவியுடன் சிரியா ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயத்தில், அந்த மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவாக இருந்து, சிரியாவின் எல்லைக்குள் தங்கள் படைகளையும் குவித்து வைத்துள்ளது.
முதலில் உள்நாட்டில் தொடங்கிய இந்த போர், தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த வாரம் சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க, துருக்கி நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட சிரிய வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கிடையில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற மீதமுள்ள பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகளின் ஆதரவுடன் சிரிய ராணுவம் தொடர் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றது. ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் அச்சமடைந்த மக்கள் பலரும் தாங்கள் வசித்து வரும் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவருகின்றனர்.
இந்தநிலையில், சிரியாவின் இட்லிப் பகுதியில் வசித்து வரும் அப்துல்லா தனது வீடு அருகே அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலின் போது தனது 4 வயதுள்ள குழந்தை செல்வா அச்சப்படக்கூடாது என்பதற்காக அவளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு சிரிக்கவைத்து ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் போது மனதை பதறவைத்துள்ளது. இந்த வீடியோவில் வீடு அருகே குண்டுமழை பொழிந்த வண்ணம் இருக்கும்போது குழந்தை செல்வாவிடம் தந்தை, ”அங்கே ஒரு விமானம் செல்கிறதா? அல்லது வான்வெளி தாக்குதல் நடக்கிறதா? என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை இது வான்வெளி தாக்குதல் என கூறுகின்றது.