1-11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்குவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பிளஸ் டூ மாணவர்களை தவிர்த்து இதர வகுப்புகளுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து புகார்களை பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.