கொரோனா ஊரடங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதாவது, தனியார் பள்ளிகள் இந்த காலகட்டத்தில் 25 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என்றும், பள்ளிகள் திறந்த பிறகு 25 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்றும், பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்த தமிழக அரசு சார்பில் கல்வி கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020- 21, 2021-22, 2022-23ஆம் ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய, தனியார் பள்ளிகள் தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை tnfeecommittee.com என்ற இணையதளத்தில் ஜூலை 20 முதல் செப்டம்பர் 25 வரை பதிவேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.