தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர், கமுதி பேருந்து நிலையம், சாயல்குடி பள்ளி மைதானம், ராமேஸ்வரம் ரயில் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், பார்த்திபனூர், தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை, எமனேஸ்வரம் பள்ளி விளையாட்டு மைதானம், பாரதிநகர் அம்மா பூங்கா, பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த காய்கறி, பழக்கடை மற்றும் பூக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அரண்மனை பகுதிகளிலுள்ள எவ்வித காய்கறி கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பவுண்ட் கடை ரோடு, வைசியர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி, மொத்த வியாபாரம் கடைகளை தவிர பலசரக்கு கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் செயல்படும் நடைபாதை கடைகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ராமநாதபுரம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் டவர் அருகிலும், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள வட்டாணம் இடத்திலும் மீன் மொத்த விற்பனை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டீ கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரிகளில் இனிப்பு காரம் போன்றவற்றை பார்சல் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு செயல்படும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து எலக்ட்ரிக் கடைகளுக்கும், கட்டுமான பொருட்கள் விற்பனையகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து காய்கறி கடைகளும், மொத்த மற்றும் சில்லறை வியாபார கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.