சிட்டுக்குருவிக்காக மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், ஒரு கிராமம் இருளில் வாழ்ந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே இருக்கிறது பொத்தகுடி என்ற கிராமம்.. இந்த கிராமத்தின் மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டை போட்டு அடைகாத்து வந்தது. இதனை கண்ட கிராமத்து இளைஞர்கள், அதனை பாதுகாக்க தொடங்கினர்.
தெருவிளக்குகள் எரிவதற்கு மொத்த கண்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டியிருக்கும் மின் இணைப்பு பெட்டியிலிருப்பதால், ஊர்மக்களால் சுவிட்சை ஆன் பண்ண முடியவில்லை. தப்பித் தவறி சுவிட்ச் போட்டால், குருவி பறந்து ஓடி விடும் என்பதால், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தெரு விளக்குகளை எரிய விடாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் அந்த கிராமமக்கள்.
சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் மிகவும் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று தெரிவிக்கின்றனர் அந்த கிராம மக்கள்.. மின் கதிர்கள் மற்றும் செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகளின் இனமே அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கிராமத்தை தேடி வந்த சிட்டுக்குருவி இனத்தை, மனிதநேயத்தோடு பத்திரமாக பாதுகாத்து பொத்தகுடி கிராமமக்கள் மிகச்சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகின்றனர்.