இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்த 1,344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
170 மாவட்டங்களில் கொரோனா அதிக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், 207 மாவட்டங்களில் குறைவான பாதிப்பு உள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியானதன் மூலம் பாதிப்பு 2,801ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.