பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பீடிகளை பதுக்கி வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரை வைத்து போலி பீடிகள் தயாரித்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பம் பகுதியில் தேனி ஹவுஸ் ரோட்டில் உள்ள பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளர் அற்புதனந்தா சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கே.வி.ஆர் தெருவில் வசித்து வரும் நாகூர்கனி என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக போலியான பீடிகள் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனையறிந்த அற்புதனந்தா உடனடியாக கம்பம் தெற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாகூர்கனியை கைது செய்துள்ளனர். மேலும் 6 நிறுவனங்களின் பெயரிள் இருந்த போலியான பீடி பண்டல்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,68,000ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.