சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவதால் தொடக்க ஜோடியில் கேப்டன் தோனி மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியயை தழுவியது. இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். சி.எஸ்.கே அணி தொடர்ந்து பெற்ற 3 வெற்றிகள் காரணமாக உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சற்று சோர்வடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது . பின்னர், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதில் அம்பாத்தி ராயுடு தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டமிழந்தார். சேன் வாட்சன் 3 ரன்னில் ஆட்டமிழக்க, சற்று நேரம் தாக்கு பிடித்த ரெய்னா 16 ரன்களில் வெளியேறினார்.
இந்தத் தொடரில் சி.எஸ்.கே 3 வெற்றிகளை பெற்றிருந்தாலும், அந்த வெற்றிகள் அனைத்தும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் புண்ணியத்தில் கிடைத்துதான். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி கொண்டு தான் வருகிறார்கள். சி.எஸ்.கே அணி 3முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது . அந்த 3 முறையும் சி.எஸ்.கே.வின் தொடக்க ஆட்டக்காரர்கள், அந்தத் தொடர் முழுவதுமாக ரன் மழையை பொழிந்து இருப்பார்கள். ஆனால் இந்த ஐ.பி.எல்4 போட்டியிலும் சேன் வாட்சனும், அம்பாத்தி ராயுடுவும் சொதப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் ஷேன் வாட்சன் மொத்தமாக 62 ரன்களும், அம்பாத்தி ராயுடு 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இது சி.எஸ்.கே.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவருக்கு பதிலாக ஷாம் பில்லிங்ஸ், முரளி விஜய் உள்ளிட்ட யாருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், ஐ.பி.எல் தொடக்க காலத்தில் இப்போதைய சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் – அனிருத்தா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பின்னர் மேத்யூ ஹேடன் – முரளி விஜய் தொடக்க ஜோடியாக களமிறங்கி கலக்கினார்கள். பின்பு, மைக் ஹஸி – முரளி விஜய் தொடக்க ஜோடி படைக்காத சாதனைகளே இல்லை.
பின்பு, பிரண்டன் மெக்கல்லம் – பாப் டூ ப்ளசீஸ் அதிரடி காட்டினார். ஏன், கடந்தாண்டு கூட ஷேன் வாட்சன் – அம்பாத்தி ராயுடு சிறப்பாகவே விளையாடினார்கள். அதனால்தான், கடந்தாண்டு ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே தன் வசமாக்கியது. ஆனால், ஐ.பி.எல் வரலாற்றில் ஓராண்டு சிறப்பாக விளையாடும் தொடக்க ஜோடிகள், அடுத்த ஐ.பி.எல் சீசனில் சொதப்பும். இது கேப்டன் தோனிக்கும் நிச்சயம் தெரிந்தே இருக்கும்.
நிச்சயம் எதிர் வரக்கூடிய போட்டிகளில் சி.எஸ்.கே அணியில் மாற்றங்கள் நிகழும். சி.எஸ்.கே அணியை சோதிக்க இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது. சி.எஸ்.கே.வுக்கு அடுத்தப் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாபுடன் வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது . இந்தப் போட்டியில் நிச்சயம் சி.எஸ்.கே அணி மீண்டு வரும் என கண்டிப்பாக அனைவரும் நம்பலாம்.