மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.. வயது 42 ஆகிறது.. இவரது மனைவி உஷாராணி (36).. இவர்களுக்கு சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்..
இந்த நிலையில், அங்கு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் கனகராஜ் (49) என்பவருடன் உஷா ராணிக்கு திருமணத்தை மீறிய தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.. இதனைகணவர் குமார் பல முறை கண்டித்தும் அந்த உறவை உஷாராணி கைவிட மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கணவன் – மனைவி இருவருக்கும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு உஷாராணி தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.. இதனால் மனமுடைந்த குமார் மனைவியுடன் நெருக்கமாக இருந்த அலுவலர் கனகராஜை அரிவாளால் வெட்டியுள்ளார்.. வெட்டுக்காயத்துடன் தப்பிச்சென்ற அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
பின்னர் குமார் தனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கருப்பசாமி கோயில் வளாகத்தில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் குருனை மருந்தை ஜூஸில் கலந்து குடித்து, தனது மகன்களுக்கும் கொடுத்துள்ளார். இதனை 3 பேரும் குடித்துவிட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் சித்தார்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து மற்ற இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மற்றொரு மகன் கோப்பெருஞ்சோழனும் பரிதாபமாக இறந்தார். குமார் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனிடையே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மனைவியின் தவறான உறவால் குடும்பமே சிதைந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.