ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் 25 பேரும் அடங்குவர். மேலும் 4 இந்தியர்கள் மற்றும் ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ராஜஸ்தான் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அம்மாநிலத்தில் அனைத்து மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா, போக்குவரத்து, ரயில் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேரில் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவ்டிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் லாக் அவுட் காலத்தில் உணவுக்கும் மருந்துகள் போன்ற அவசிய தேவைகளும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2 மாத ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே இலவசமாக வழங்கப்படும் என்றும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடியின் வேண்டுகோளின் படி இன்று (22 ஆம் தேதி) இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.