அமெரிக்காவில் கொரோனாவால் தினம் தினம் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனாவால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ள நிலையில், 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை காலம் இந்த அரக்கத்தனமான வைரஸ் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை காவு வாங்க போகிறது என்ற மிகப் பெரிய கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 11 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டு, 67 ஆயிரத்து 448 பேர் இறந்துள்ளனர். தினம் தினம் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் கொரோனா வைரசால் பலியானவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் 4 பெரிய டிரக்குகளில் அழுகிய நிலையில், மனித உடல்கள் கிடந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.2 நாட்களாக அந்த டிரக்குகள் அங்கேயே நின்றிருந்த நிலையில், அதில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இதனால் இதைபற்றி அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அந்த டிரக்குகளில் 12க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்தி அதனை பாதுகாத்து வருவதாகவும், குளிர்சாதனம் பெட்டி செயலிழந்து போனதால் உடல்கள் அனைத்தும் அழுகியதாகவும் கூறப்படுகிறது.
நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ இதுகுறித்து கூறுகையில், நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே செல்வதன் காரணமாக மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றார்.