திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணமகன் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணமகள் விஜிக்கும் லால்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் சார்பாக, மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் பேனர்கள் வைத்திருந்தனர்.
அதேபோல மணமகன் இளவரசன் நண்பர்களும் பேனர் வைத்திருந்தனர். இவர்கள் வைத்திருந்த பேனர் தான் திருமணத்திற்கு வந்தவர்களையும், அவ்வழியாக சென்றவர்களையும் சில நிமிடம் நின்று ஆச்சரியத்துடன் வாயை பிளந்து பார்க்க வைத்தது.
ஆம் அப்படி என்னதான் ஸ்பெஷல் என்றால் அது நித்யானந்தா தான். நண்பர்கள் வைத்த பேனரில் நித்தியின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இப்படி நித்தி புகைப்படத்துடன் பேனர் வைக்க காரணம் என்ன என்பது குறித்து மணமகனின் நண்பர்கள் கூறுகையில், திருமணத்திற்கு வருபவர்களை கவரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அப்படி யோசிக்கும்போது தான் ஐடியா தோன்றியது. இதற்காக தற்போது இணையத்தில் யார் அதிக டிரெண்டில் உள்ளனர் என்று பார்த்த போது தான் அதில் சுவாமி நித்தியானந்தா இருப்பது தெரியவந்தது.
பேஸ்புக், வாட்சப் என வலை தளங்கள் எதை எடுத்துக்கொண்டாலும் நித்தியின் வீடியோதான் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவருடைய போட்டோவை வைத்தால் பொதுமக்களை கவர முடியும் என நினைத்து, இதற்காகவே பேனரில் நித்தியின் போட்டோவை அச்சடித்தோம். நித்தி வித்தியாசமாக இருப்பதால் எங்களுக்கு அவரை ரொம்ப பிடித்துள்ளது.
குறுகிய காலத்தில் நித்தி அதிக வளர்ச்சி அடைந்தவர். அவர் கைலாசத்தில் இருக்கிறேன் என்று சொல்கிறார். அது எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரிந்தால் நாங்களும் அங்கே செல்வோம். அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றால் அதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பேனர் அடித்தோம்.
நித்தி எதைப் பற்றியுமே கவலைப்பட மாட்டார். யார் அவரை பற்றி எது சொன்னாலும் அவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ? அதைத்தான் நித்தி செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அவருடைய கொள்கை தான் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நித்யானந்தா எப்போதுமே குதூகலமாக, ரொம்ப ஜாலியாக இருப்பார். இது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது.
நித்தி அடிக்கடி ‘நோ சூடு நோ சொரணை’ என்று கூறுவார். அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அனைவருமே அந்த வசனத்தை போட்டு தான் பேசுகிறார்கள். அதனால் தான் பேனரில் அந்த வசனத்தை (வாசகம்) அடித்தோம். அதேபோன்று தான் நாங்களும். எங்களை யார் என்ன சொன்னாலும், கவலைப்பட மாட்டோம்.
எங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ? அதனை நித்தி போன்று நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம். அவரைப் போலவே குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம் என்றனர். தற்போது இவர்களது பேனர் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. போலீசாருகே தண்ணி காட்டும் நித்திக்கு இப்படியும் ரசிகர்கள் இருக்கிறார்களா என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.