உத்திரப்பிரதேச மாநிலத்தில் நோய் பரவல் அதிக அளவில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மே 15ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கொரோனா நோய் தொற்று உள்ளாகியுள்ளனர்.
இதனால், நோய் பரவலை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மே 15ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணை முதல்வர் தினேஷ் ஷர்மா அவர்கள், மே முதல் வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அப்போது பொதுத்தேர்வுகளை நிறுத்தி வைப்பதா? அல்லது பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்வு நடத்தப்படுமா? என்பது பற்றி ஆலோசனையின் மூலம் தெரிய வரும். பல்கலைக் கழக தேர்வுகள் மே 15ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 6.72 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 1.11 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.