உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கொரோனா என்று ரியாசுதீன் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு வெள்ளிக்கிழமை இரவு பிறந்த மகனுக்கு கொரோனா என்று பெயர் வைத்துளேன். தற்போதைய காலங்களில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது.
இதனை எதிர்த்து உலக மக்கள் அனைவரும் போராடுகின்றனர் ஆகவே மக்கள் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து விடுபடவும் விழிப்புடன் இருக்கவும் கொரோனா என்று பெயரிட்டு உள்ளேன்” என்று கூறினார்.