2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து நடந்துள்ளது. இதில் 1,48,000 பேர் பலியாகியுள்ளனர். இந்த சாலை விபத்தில் 4,70,000 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரும்பாலும் மற்ற சாலைகளை விட தேசிய நெடுஞ்சாலைகளிலேயே அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் ஆண்கள் 86 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயது முதல் 45 வயதுடைய ஆண்கள் ஆவர்.
இதில் அதிர்ச்சி ரிப்போர்ட் என்னவென்றால் கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியாவை பொருத்தவரை தமிழ்நாட்டில் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. ஆனால் உயிரிழப்பை பொருத்தவரையில் உத்தரபிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
1. உத்திரபிரதேசம் – 20, 124 பேர்
2. தமிழ்நாடு – 16, 157 பேர்
3. மகாராஷ்டிரா – 12, 264 பேர்
4. கர்நாடகா – 10,609 பேர்
5. ராஜஸ்தான் – 10 444 பேர்
சாலை விபத்துக்கள் நிகழ்வது விதிகளை பின்பற்றாமலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், தவறான பாதையில் வாகனங்களை செலுத்துதலுமே முக்கிய காரணமாக அமைகின்றது. ஒவ்வொருவரும் சரியாக விதிமுறையை கடைபிடித்து சரியாக ஓட்டினால் சாலை விபத்தை தவிர்க்கலாம்.