செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை மேதகு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வினை மனு மூலம் அளித்துள்ளோம். குறிப்பாக விடியா தி.மு.க அரசாங்கம் திரு.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு, 18 மாத காலம் ஆகிறது.
இந்த 18 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை. இதுதான் அன்றாட நிகழ்வாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கையிலும் பார்க்கின்ற செய்தி. இன்றைக்கு ஒரு திறமையற்ற பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால், இந்த நிகழ்வுகள் எல்லாம் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் 23.10.2022 அன்று கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு வெடிக்கப்பட்டது. இது ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று மாநில அரசுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விடியா திமுக முதலமைச்சர் அவர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி, இருக்கின்ற உளவுத்துறை, காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அரசினுடைய வழிகாட்டுதலை கடைபிடிக்காத காரணத்தினாலே 23.10.2022 அன்று கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இந்த சிலிண்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கின்றது, அதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி முறையாக மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தும், அந்த தகவலின் அடிப்படையில் உளவுத்துறை எச்சரிக்கையாக இருந்து கவனமாக இருந்து செயல்பட்டிருந்தால் இதை கண்டுபிடித்திருக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் போய்விட்டது. இதே மக்கள் அதிகம் இருக்கின்ற பகுதியில் இந்த சிலிண்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்தால் பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும். தீவிரவாதம் என்று சொன்னாலே, அதிகமாக எங்கெங்கு நடைபெறுகிறது என்று உளவுத்துறைக்கு தெரியும். அதை உரிய முறையில் கவனம் செலுத்தி, தடுத்து இருக்கலாம். இதையெல்லாம் உளவுத்துறை தவறிவிட்டது. இந்த அரசு ஒரு திறமையற்ற அரசு என்பதை நிரூபணம் ஆகி இருக்கிறது.