அமெரிக்காவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் திறந்தவெளியில் டிரைவ்-இன் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 55,899 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் டெக்சாஸ், கலிஃபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 72 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாகவும், 45 சதவீதமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தொற்றுநோய் தடுப்பு இயக்குனர் ரோச்சல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திறந்தவெளி டிரைவ்-இன் தடுப்பூசி மையங்கள் புளோரிடா உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் தடுப்பூசி மையங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். மேலும் அமெரிக்க சுகாதாரத்துறை ஜார்ஜியா, டெக்ஸாஸ், கலிபோர்னியா, நியூயார்க் வடக்கு கரோலினா உள்ளிட்ட மாநிலங்களிலும் திறந்தவெளி டிரைவ்-இன் தடுப்பூசி மையங்களைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.