பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் டென்மார்க்கிடையே நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை துறை சார்பாக செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள இட்டா நகரில் பசுமை விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் பெயரை டோன்யி போலோ விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெட்ரோலில் 10% அளவுக்கு எத்தனால் கலக்கப்படுவதால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டிய 40 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு கிடைத்துள்ளதை கருத்தில் கொண்டு, 12 சதவீதமாக எத்தனால் கலப்பை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. சி-ஹெவி மொலாசாஸ் முறையில் இருந்தும் பி-ஹெவி முறையில் இருந்தும் பிரித்தெடுக்கப்படும் எத்தனாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் 49.41 ரூபாய் ஆகவும், 60 புள்ளி 73 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை 65.66 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சல்ஃபர், பொட்டாஷ், பாஸ்பரஸ், நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்கள் போன்றவற்றுக்கான மானியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சல்பருக்கு கிலோவுக்கு 6.12 ரூபாயும், பொட்டாஷுக்கு 23.65 ரூபாயும், பாஸ்பரஸிற்கு 66.93 ரூபாயும், நைட்ரஜனுக்கு 98.2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 51,875 கோடி ரூபாய் மானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.