கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 27வது நாளாக 2ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் இன்று முதல் மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இருப்பினும் தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு தளர்வுகள் கிடையாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4203 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 223 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 2003 பேரும், குஜராத்தில் 1743 பேரும், தமிழகத்தில் 1477 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 1407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியின் மாஹே மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதுவரை நாடு முழுவதும் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.