கருங்கோழியின் விலை ஒரே மாதத்தில் ஏறி கிலோ ரூபாய் 1000க்கு விற்கப்பட்டு வருகிறது.
கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வருவதற்கு முன் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், மக்கள் தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு உள்ளிட்டவற்றை எடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில் கருங்கோழி கறி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சில தகவல்கள் வாட்ஸ்அப்பில் வலம் வந்ததால் மக்கள் அதை உண்மை என நம்பி வாங்கி சாப்பிட தொடங்கிவிட்டனர். இதனால் அதனுடைய விலை தற்போது பயங்கரமாக ஏறியுள்ளது. குறிப்பாக பரமக்குடியில் கடந்த மாதம் கிலோ ரூபாய் 450 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ஒரே மாதத்தில் விலை சரசரவென ஏறி கருங்கோழி கறி கிலோ ரூபாய் 1000க்கும் அதனுடைய முட்டை ரூபாய் 25 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.