குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார மையம் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை அதிகமாக இல்லை. எனினும், பாதுகாப்பிற்காக உலக சுகாதார மையம், கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று பொது சுகாதார அவசர நிலை பிறப்பிப்பது தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டது.
அதில், ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவல் அதிகமாக இருந்தாலும், பெருந்தொற்றாக அறிவிக்க உடனடியாக அவசரம் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. 50 நாடுகளில் தற்போது வரை 6,000-த்திற்கும் அதிகமான மக்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து உலக சுகாதார மையத்தின் தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருப்பதாவது, கடந்த 14 நாட்களில் குரங்கு அம்மை பாதிப்புகள் ஏறக்குறைய 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே அடுத்த நிலையாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இன்னும் சில நாட்களில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அவசர நிலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.