Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு!

சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் 58-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், 136 அரசுக் கண்காணிப்பிலும், 33,850 பேர் தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

63, 380 பேர் 28 நாள் வீட்டுக் கண்காணிப்பு முடித்துள்ளனர் என்றும் தமிழகத்தில் 3 லட்சம் என் -95 முகக்கவசங்கள் கைவசம் உள்ளன என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். இதுவரை 12,746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை உள்ள 25 அரசு சோதனை மையங்கள், 9 தனியார் சோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ள நிலையில் புதியதாக 2 மையங்களுக்கு இன்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்திலே அதிக பாதிப்பு சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |