தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது .இதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது .ஆனால் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது .
இதனால் 105.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. இதன்பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அணியின் கேப்டன் டீன் எல்கர் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன்பிறகு களமிறங்கிய மார்க்ரம் (13ரன்), கீகன் பீட்டர்சன் (15 ரன்), வான் டர் டுசன் (3 ரன்)ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேறினர் .இறுதியாக தென் ஆப்ரிக்கா அணி 62.3 ஓவரில் 197 ரன்னில் சுருண்டது. இதில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன்பிறகு 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இறுதியில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் குவித்துள்ளது.