இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் நடந்த 2-வது டெஸ்டில் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷமி- பும்ரா ஜோடி அதிரடியாக விளையாடி 89 ரன்கள் குவித்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதையடுத்து 272 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி விளையாடியபோது இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 120 ரன்னில் இங்கிலாந்தைச் சுருட்டி அமர்க்களப்படுத்தினர். இதனால் இன்று தொடங்கவுள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்திய அணி சம பலத்துடன் இருப்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே முந்தைய போட்டியின் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது .இதனால் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் இந்த டெஸ்ட் போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள இப்போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 மற்றும் டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது .