Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ அரையிறுதி போட்டி…. மழையால் தடையான ஆட்டம் இன்று தொடரும்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி நேற்று மழையால் தடைபட்ட நிலையில், இன்று எஞ்சியுள்ள ஆட்டம் தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர்   

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும்  , மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர்.

தொடக்க முதலே இந்திய அணியின் பந்து வீச்சில் திணறிய மார்ட்டின் கப்தில் பும்ரா வீசிய 4-வது ஓவரில் 1 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இறங்கிய வில்லியம்சன் – நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில் நிக்கோல்ஸ் 28 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் க்ளீன் போல்டானார்.

இதையடுத்து அனுபவ வீரர் ராஸ் டெய்லர் – வில்லியம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடியை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்தார். அதன் பிறகு வில்லியம்சன் 67 ரன்களில் சஹால் பந்து வீச்சில் ஜடேஜா வசம் பிடிபட்டார்.

அதை தொடர்ந்து இறங்கிய நீஷம் 12, கோலின் டி கிராண்ட் ஹோம் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் டெய்லர் ஒரு புறம் நிலைத்து ஆடி அரை சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை.

இதனால் நடுவர்கள் எஞ்சிய இன்னிங்ஸூடன் இன்று 3 மணிக்கு ஆட்டம் தொடரும் என்று அறிவித்தனர். மழை பெய்த போது ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும்,டாம் லேதம் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆட்டத்தை தொடர்வார்கள். ஒரு வேளை இன்றும் மழை குறுக்கிட்டால் லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்திருக்கும் அணி என்ற அடிப்படையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி விடும்.

Categories

Tech |