இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார் .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கே.எல். ராகுல் அரைசதம் கடந்தார். இதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் ,அஸ்வின் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .
இதில் ரிஷப் பண்ட் 17 ரன்னில் ஆட்டமிழக்க ,அஸ்வின் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது ,இதில் மார்க்ரம் 7 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் டீன் எல்கார் 11 ரன்னுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.