இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 29 ரன்னில் ஆட்டமிழக்க, மயங்க் 33 ரன்னில் வெளியேறினார்.இதன்பிறகு இணைந்த விஹாரி – விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் விஹாரி அரைசதம் அடிக்க, விராட் கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைதொடர்ந்து ஹனுமா விஹாரி 58 ரன்னிலும்,ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த்- வீந்திர ஜடேஜா ஜோதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.குறிப்பாக எம்பில்தெனியா வீசிய 76-வது ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்சர், 2 பவுண்டரி என அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதோடு ரிஷப் பந்த் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அஸ்வின் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதில் ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.இலங்கை அணி தரப்பில் லசித் எம்பல்தெனியா 2 விக்கெட்டும் , சுரங்கா லக்மல்,விஷ்வா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, தனஞ்செய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.