இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் -பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை அடித்து விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய சஞ்சு சாம்சன் பிரித்வி ஷா உடன் இணைந்தார். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிரித்வி ஷா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து சஞ்சு சாம்சன் 46 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் 23 ஓவர்களில் இந்திய அணி 147 ரன்களை எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதன் பிறகு 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற அதிரடி ஆட்டத்தை காட்டிய சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இந்திய அணி 43 ஓவர்களில் 225 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் அகிலா தனஞ்சய மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கி இலங்கை அணி 226 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.