இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது .
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது . இதில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 49 ரன்கள் எடுத்து அரைசத வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து சஞ்சு சாம்சன் 46 ரன்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுத்திருந்தனர்.
இதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணி 227 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இலங்கை அணியின் தொடக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 76 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து பானுகா ராஜபக்ச 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ராகுல் சாகர் 3 விக்கெட்டுகளும், சேதன் சக்கரியா 2 விக்கெட்டுகளும் ,ஹர்திக் பாண்டியா மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.