இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் , சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சமீரா மற்றும் ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணி 165 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
தொடக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 44 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியாக 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், தீபக் சாகர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.