Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த சுயேச்சை!

ஊழல் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப்பெறுவேன் என சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குண்டு ஹரியானா முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு சுயச்சை எம்.எல்.ஏ பால்ராஜ் குண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சராக மணிஷ் குரோவர் இருந்தபோது சர்க்கரை ஆலைகளில் அவர் பல மோசடி செய்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக கட்டார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் கொடுத்துவரும் ஆதரவை திரும்பப்பெறுவேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நான் என் ஆதரவை திரும்பப்பெற்றாலும் 56 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு பாஜக அரசுக்கு உள்ளது. எனவே, ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்” என பால்ராஜ் தெரிவித்துள்ளார். பால்ராஜ் மீதே ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஊழல் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருப்பது நகைப்பாக உள்ளது என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காவல் நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மோசடி வழக்கில் தன்னை கைது செய்யுமாறு பால்ராஜ் சவால் விடுத்தார். ஆனால், வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகக் கூறி காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 40 தொகுதிகளை மட்டுமே வென்றது. இருந்தபோதிலும், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாலும், ஏழு சுயேச்சைகளின் ஆதரவு இருப்பதாலும் மனோகர் லால் கட்டார் அங்கு ஆட்சி நடத்தி வருகிறார்.

Categories

Tech |