ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்து மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தவறான தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் அனைவரும் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்காக 9489719722 என்ற சிறப்பு அலைபேசி எண்ணினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் அந்த எண்ணினை தொடர்புகொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஏர்வாடி தர்கா ஆகிய பல பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ராமநாதபுரம் நகர காவல் துறையினர், தகவல் தெரிவித்த மேற்கு மும்பை மலாட் என்ற பகுதியை சேர்ந்த ராஜா ஹரிஜான் என்பவரை கைது செய்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் குவைத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அந்தப் பகுதியிலிருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்த சிறப்பு எண்ணிற்கு இந்த தவறான தகவலை அளித்ததாகவும் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து தவறான தகவல் அளித்த ராஜா ஹரிஜான் என்ற நபரின்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.