முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கும்- இந்தியாவுக்கும் இடையே 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் விளையாட வில்லை என்றாலும் மற்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளனர். இந்த வரலாற்று சாதனைக்கு காரணமாக இருந்த இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இதில் நமது 3 தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. என பதிவிட்டு அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலமைச்சருக்கு தனது நன்றியை ரீட்வீட் செய்துள்ளார். அதில் “நன்றிகள் பல ஐயா. என் கிரிக்கெட் பயணத்தில் மிகச்சிறந்த வெற்றியாக கருதுகிறேன். தமிழ் மண்ணிலிருந்து 3 பேர் போட்டியில் பங்கேற்றது எனக்கு பெருமை அளிக்கிறது. எனது வாழ்த்துக்கள் வாஷி & நட்டு “என்று பதிவிட்டுள்ளார்.
பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்.
இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.@ashwinravi99 @Natarajan_91 @Sundarwashi5 #AUSvsIND— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 19, 2021