இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இரு அணிகளும் அதிக பலத்துடன் இருப்பதால்,எந்த அணி போட்டியை வெல்லும் என்பதை குறித்து, கிரிக்கெட் பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சமீபகாலமாக விராட் கோலி தலைமையிலான அணி , மூன்று வடிவிலான போட்டிகளிலும் ,இளம் வீரர்களைக் கொண்டு அதிக பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. அதோடு அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்படுகிறார். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர், கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது,” சமீபகாலமாகவே இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் கோலி மட்டுமல்லாது , அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் முக்கியமாக இருக்கிறார். இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக தன்னம்பிக்கையை விதைத்து உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது , கேப்டன் விராட் கோலி வெளியேறிய பிறகும் ,இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது . இந்தப் போட்டியில் கேப்டன் கோலி மற்றும் முக்கியமான வீரர்கள் காயமடைந்து வெளியேறிய நிலையிலும், இந்திய அணி வெற்றி பெற்றது ஆச்சரியமான ஒன்றுதான். இதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் திட்டங்களே ஆகும்”, என்று அவர் கூறியுள்ளார்.