ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு அவர்களை ஒடுக்க ராணுவ வீரர்களை பயன்படுத்துகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் ஆஃப்கானிஸ்தானில் தலீபான்களின் தாக்குதலில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது திறமைக்கு சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவரான தனுஷ் சித்திக் கந்தகாரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் கந்தகாரில் செய்தி சேகரிப்பு பணியின் போது ராய்ட்டர்ஸ் புகைப்பட செய்தியாளர் தனுஷ் சித்திக் வன்முறை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் சித்திக் மற்றும் ஊடக குடும்பத்தினருக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு ஊடகம், பேச்சு சுதந்திரம், பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்திற்கு அரசு உறுதி தன்மையுடன் பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.