Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC : 10 விக்கெட்டில் அபாரம்… பாகிஸ்தானை கடித்து குதறிய இளஞ்சிங்கங்கள்..!!

 யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது.

U19 WorldCup: Pakistan fell to 172 all out.

இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசிர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹைதர் அலி, முகமது ஹுரைரா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி களத்தில் செட் ஆவதற்குள்ளேயே இந்திய பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஷ்ரா பந்துவீச்சில் முகமது ஹுரைரா நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பியதால், பாகிஸ்தான் அணி ஒன்பது ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

pak

ஹைதர் அலியை தொடர்ந்து வந்த ஃபகாத் முனிர், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் டக் அவுட்டானார். இருப்பினும், கேப்டன் ரோஹைல் நசிருடன் ஜோடி சேர்ந்த ஹைதர் அலி சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், ஹைதர் அலி 56 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய காசிம் அக்ரம் ஒன்பது ரன்களில் ரன் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஆறாவது வரிசையில் களமிறங்கிய முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

Image

15 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அதர்வா அங்கோலேக்கர் பந்துவீச்சில் ஸ்கொயர் லெக் திசையில் அடித்த பந்தை, திவ்யான்ஷ் சக்சேனா டைவ் அடித்து சிறப்பாக பிடித்தார். ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த விக்கெட் அமைந்தது.

இதைத்தொடர்ந்து வந்த இர்ஃபான்கான் மூன்று ரன்களில், கார்த்திக் தியாகியின் யார்க்கர் பந்தில் க்ளீன் போல்டானார். இதையடுத்து, செட் பேட்ஸ்மேனாக இருந்த கேப்டன் ரோஹைல் நசிரும், சுஷாந்த் மிஷ்ராவின் ஷார்ட் பிட்ச் பந்தில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இறுதியில், பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Image

 

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக  ஜெய்ஸ்வால் மற்றும் சக்சேனா ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் இருவரையும் வீழ்த்தமுடியவில்லை. இதில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால்  அரைசதம் அடித்து அசத்தினார். ஒருபுறம்  சக்சேனா கம்பேனி கொடுக்க ஜெய்ஸ்வால் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டார். அதன் பிறகு சக்சேனாவும் அரைசதம் கடந்தார்.

Image

இறுதியில் இந்திய அணி 35.2 ஓவரில் விக்கெட் இழக்காமல் 176 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 105* ரன்களும் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்), சக்சேனா 99 பந்துகளில் 55* ரன்களும் (4 பவுண்டரி) எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. வருகின்ற 5 ஆம் தேதி இரண்டாவது அரையிறுதியில்  நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணியுடன் இந்திய அணி 9 ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோத இருக்கிறது.

 

Categories

Tech |