எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் உண்டாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ” பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் தலையீடுபவர்களுக்கு, நமது பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியாவின் ஒருமைப்பாடு நமக்கு முக்கியம். நம்மால் என்ன செய்ய இயலும், நமது ராணுவ வீரர்களால் என்ன செய்ய முடியுமென்பதை லடாக்கில் அனைவருமே பார்த்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷோ லிஜியான் கூறுகையில்,” பிரதமர் மோடி ஆற்றிய உரையை நாங்கள் கவனித்தோம். நாங்கள் இருவருமே நெருக்கமான அண்டை நாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி. நம்முடைய பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்ட கால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.