லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் படையெடுப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியதில் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கள்ளவான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அருணாசல பிரதேசம் அருகில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. அதன் காரணமாக ஐந்தாவது கட்டமாக இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் செப்டம்பர் மாதம் சார்க் அமைப்பு நாடுகள் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசும் நிகழ்ச்சி ரஷ்யாவில் நடைபெறுகிறது.
அப்போது போது சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடம் இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.