இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி இந்தியாவிலும் அதன் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் மக்களுக்கு சற்று அச்சம் எழுந்துள்ளது. இருந்தபோதிலும் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தினம்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 292 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து தமிழகத்தில் 571 பேருக்கும், டெல்லி – 503, தெலுங்கானா – 321, கேரளா 314, ராஜஸ்தான் – 253, உ.பியில் 227 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 42 பேர் குணமடைந்துள்ள நிலையில், 45 பேர் இறந்துள்ளனர்.