பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது.
மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது. பாகிஸ்தானின் இந்த முடிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் தற்போது அந்நாட்டுக்கான பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. இதற்காக டெல்லி பேருந்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 12 முதல் டெல்லியில் இருந்து லாகூருக்கு பேருந்து சேவை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து டெல்லி கேட் பகுதியில் இருந்து காலை 6 மணிக்கு பாகிஸ்தானுக்கு செல்கிறது. 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தானுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் 2 ஆண்டுகள் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.