கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன் முறையாக இரவில் விண்ணில் செலுத்தி, இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இச்சோதனையில் அணுஆயுதத்தை தாங்கிச்சென்று 3 ஆயிரத்து 500 கி.மீ., இலக்கைத் தாக்கும் அக்னி-3 ரக விமானம் இரவில் விண்ணில் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.
இந்தச் சோதனை சிறப்பான வெற்றியைக் கண்டுள்ளதாக டி.ஆர்.டி.ஒ. அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். உயர் தர தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை அதீத அதிர்வுகள், வெப்பம் உள்ளிட்டவற்றை தாங்கும் திறன்பெற்றது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் சுற்றளவும், 50 டன் எடையும் கொண்டுள்ள இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.