கொரோனா வைரஸை அழிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசுக்கு நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியதாவது, 2 மெல்லக் கொல்லும் நோய்களை நாட்டிலிருந்து ஒழிப்பதில் இந்தியா உலகுக்கே முன்னிலையாக விளங்கியது.
பெரிய அம்மை நோயை ஒழித்து உலகுக்கு சிறந்த பரிசை வழங்கியது. போலியோவையும் இந்தியா ஒழித்து விட்டது.எனவே இந்தியாவுக்கு வியக்கத்தக்க திறன் இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பது குறித்து என்ன செய்ய வேண்டும் என்று உலகுக்கு காட்ட வேண்டும்.
மேலும், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என்பதற்கு எளிதில் பதில் சொல்ல முடியாது. இதற்கு முன்பு செய்தது போல இந்தியா இப்போதும் உலகுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று அவர் கூறினார்.