இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 09 ரன்னில் ஹென்டிரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து விராட் கோலியும், ஷிகர் தவானும் இணைந்தனர். சிறப்பான ஆடிய ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு கேப்டன் விராட் கோலியும் ரன் குவிக்க திணறினார். விராட் கோலி 09, எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட் 19 ரன்னிலும் வெளியேறினர். அதை தொடர்ந்து வந்த வீரர்களும் ரன் எடுப்பதில் சிரமபட்டனர். ஷ்ரேயஸ் ஐயர் 5, க்ருனால் பாண்டியா 4 ரன்களிலும் நிலைத்து நிற்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். கடைசியில் வான வேடிக்கைகள் பார்க்கலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். கடைசியில் ஜடேஜா 19, ஹர்திக் 14, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்தது . தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளும், ஹென்ரிக்ஸ் மற்றும் பார்சுன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 135 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.