இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகின்றது .
3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. டி-20 தொடரைக் கைப்பற்றிய உற்சாகத்துடன் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றத் தயார் நிலையில் உள்ளது.
அதே போலத் தொடர்ந்து வெற்றி நடையில் வலம் வரும் இந்திய அணியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி ஒருநாள் தொடரை கைப்பற்றும் நோக்கில் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றியின் மீதே குறியாக இருப்பதால் ஹாமில்டன் நகரில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடம் : சீட்டோன் பார்க், ஹாமில்டன்
நேரம் : காலை 7:30 மணிக்கு :
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (ஆங்கிலம், தமிழ் – அரசு கேபிளில் இந்த சேனல் மூலம் காணலாம்)
முன்னணி வீரர்கள் அவுட்
இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயாங் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல நியூஸிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளார்.
வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சேப்மேன் நியூஸிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த ஒருநாள் தொடரில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பிரித்வி ஷா இந்திய அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.