இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், செக் குடியரசை சேர்ந்த தெரேசா ஸ்வாபிகோவாவை எதிர்கொண்டார். ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செக்குடியரசு வீராங்கனை போட்டியில் பாதியிலிருந்து வெளியேறினார். இதனால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையடுத்து நடைபெறும் 2-வது சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான மால்விகாவை, சாய்னா எதிர்கொள்ள உள்ளார். இதைத்தொடர்ந்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனோய், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாப்லோ அபியானை எதிர்த்து மோதினார். இதில் 21-14, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல் லக்சயா சென் எகிப்தின் ஆதம் ஹாதமை 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.