Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா – பாக். கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும்’: யுவராஜ் சிங் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்கள் நடந்தால், அது கிரிக்கெட்டுக்கு நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

முன்பு ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது.

இறுதியாக, 2013இல் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள், டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அதன்பின், இந்த இரண்டு அணிகளும் ஆசியக்கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து வருகின்றனர். இதனால், அரசியல் காரணங்களை விடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், ‘ பாகிஸ்தானுக்கு எதிராக 2004, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் விளையாடிய நினைவு எனக்கு இருக்கிறது. ஆனால், தற்போதைய காலங்களில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடர்கள் நடைபெறாமல் இருக்கிறது. நமக்கு கிரிக்கெட் பிடிக்கிறது என்பதற்காகத்தான், இந்த விளையாட்டை விளையாடுகிறோம்.

இதனால், நமக்கு எதிராக எந்த அணி விளையாட வேண்டும் என்பதை நாம் தேர்வு செய்ய முடியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற்றால், அது கிரிக்கெட்டுக்குத்தான் நல்லது என்பேன்” எனத் தெரிவித்தார்.

Yuvraj, Afridi bat for India-Pakistan bilateral series

முன்னதாக, ஆஷஸ் தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் பெரியது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தெரிவித்திருந்தார். ஆனால், மக்களுக்குப் பிடித்த இந்தப் போட்டி, பல்வேறு அரசியல் காரணங்களால் நடைபெறாமல் இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்க இரு நாட்டுத் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டுமேன அப்ரிடி குரல் கொடுத்திருந்த நிலையில், தற்போது யுவராஜ் சிங்கும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |