அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 45 வயதுடைய சர்மிஸ்தா என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கின்ற பிளானோ என்ற நகருக்கு கணவருடன் குடியேறியுள்ளார். மூலக்கூறு உயிரியல் படிப்பை படித்திருக்கின்ற அவர், புற்று நோயாளிகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சர்மிஸ்தா தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் பிளானோ நகரில் இருக்கின்ற பூங்கா ஒன்றில் ஓட்டப் பயிற்சி செய்வதற்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனைத்தொடர்ந்து அவரின் உடல் கால்வாய் அருகே கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சர்மிஸ்தா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர், பகாரி மான்கிரீப்(29) என்ற கொள்ளையனை கைது செய்துள்ளனர். ஆனாலும் இந்த கொலை எப்படி நடந்தது என்பது பற்றி காவல்துறையினருக்கு எத்தகைய ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதிலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஷர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.