நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 16. 5 சதவீதம் பின்னடைவை சந்திக்கும் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 16.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் இடையே பங்குச்சந்தையில் பட்டிலாகியுள்ள 1000 நிறுவனங்கள் தங்களுடைய முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு உள்ளன. அதில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வருவாய் சரிவை சந்தித்துள்ளது. அதேபோன்று 55 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் நிகர லாபம் வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.